Saturday, June 8, 2013

அமெரிக்காவின் Pittsburgh sri venkateswara temple


அமெரிக்காவின் Pittsburgh sri venkateswara temple   
அருமையாக உள்ளது .  திருப்பதி போலவே சின்ன மலை மாதிரி உயர்த்திக் கட்டின கோயில் .1975 ல் திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஆந்திரப் பிரதேச அரசாங்கம் உதவி மற்றும் மேற்ப்பார்வையில் கட்டிய கோயில் . பூஜை முறைகளில் இருந்து பெருமாள் உருவம் வரை அத்தனையும் திருப்பதி போலவே . TTD தேவஸ்தானத்தில் உள்ள சூழலே அந்த அலுவலகத்திலும் !. பெருமாள் படம் ,ஸ்லோக புத்தகங்கள் ,cd க்கள்  போன்றவற்றிலிருந்து 
உண்டியலில் போடும் உருவம் வரைக்கும் கிடைக்கிறது . அது மட்டும் இல்லை .புளியோதரை,தயிர் சாதம் ,லட்டு (உதிர்த்தது ) எல்லாம் கிடைக்கிறது .
பெருமாள் தரிசனம் செய்து ,அர்ச்சனை ஆரத்தி "கோவிந்தா .....கோவிந்தா " எல்லாம் முடித்து பிரகாரம் சுற்றி வந்தால் மகாலட்சுமிக்கு தனி சன்னதி . தனி அர்ச்சனை .(அன்றைக்கு நான் கட்டிக் கொண்டு போன புடவை  நான் தேடித் பார்த்து வாங்கிக் கொண்ட இளம் ரோஜா நிறத்தில் வாடாமல்லி கலர் பார்டர் போட்ட பட்டுப் புடவை .அன்றைக்கு மகாலட்சுமிக்கு சார்த்தியிருந்த புடவையும் அதே நிறம்,அதே பார்டர் ,அதே புடவை !! அட....!!!)
மனசு நிறைந்த தரிசனத்தோடு ,எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்திய முகங்களையும் பட்டுப் பாவாடை சட்டை குழந்தைகளையும் பார்த்த திருப்தியோடு திரும்பினேன் .இன்றைக்கு பார்ப்பதற்கு "ஆஹா அமெரிக்காவில் திருப்பதியா " என்று வியந்து தோன்றினாலும் ,35 வருடங்களுக்கு முன்னால் எப்படி யோசித்தார்கள்,பாடு பட்டார்கள் ,கட்டி முடித்தார்கள் என்று நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது .அந்த முன்னோடிகளை 
வணங்கத் தோன்றுகிறது .


Sunday, May 16, 2010

விலகி இருங்கள்

விலகி இருங்கள்

அன்பாம் தியாகமாம் ,
கடமையாம் பொறுப்பாம்,
அன்னையாம் பாசமாம்
உரிமையாம் ஒட்டுதலாம்!

மாறும் உலகத்தை
மக்களின் வேகத்தைப்
புரிந்து கொள்ளாமல்
புலம்பும் பெரிசுகள் !

பத்து நாள் உணவை
பாதுகாத்து உண்கிறோம்,
பல மணி நேரம் உழைத்து
பணம் சேர்க்கிறோம்!

கப்பல் காரும்,அமிழும் சோபாவும்
கலக்கலாய் சமையலறை
கண்ணாடி குளியலறை
வசதியே வாழ்க்கையாய்!

மூடிய அறைக்குள்
மொத்த சந்தோஷமும்!
செல்போனும் சினிமாவும்
கணினியும் மனைவியும்!

படிப்பும் பதவியும்,
பணமும் பளபளப்பும்!
அனுபவித்துப் பார்க்கிறோம்
அசூயை வேண்டாம்!

எங்கள் வாழ்க்கை,எங்கள் வசதி
எங்கள் சம்பளம் எங்கள் விருப்பம்!
அட்வைஸ் வேண்டாம், ஆலோசனை வேண்டாம்
அருகில் வராமல் விலகி இருங்கள்!

Friday, May 15, 2009

உதவ மனசிருப்பவர்கள் படியுங்கள்


ப்ளஸ் டூவில் 1200க்கு 1100மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்திருக்கிறாள் சித்ரா !! பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் சித்ராவின் தந்தை இறந்து விட்டார்.தாயார் கூலி வேலை செய்பவர்.இன்னும் இரண்டு தங்கைகள்.

அப்போது யாரோ சொன்ன ஆலோசனையில் சேவாலயாவில் வந்து தன் மூன்று பெண்களையும் பள்ளியில் சேர்த்தார் அந்த தாய்!!

சேவாலயாவில் படிப்பு,புத்தகங்கள்,உடை,சாப்பாடு எல்லாமே இலவசம்.

இதில் படித்துதான் இன்று நல்ல மதிப்பெண்கள் எடுத்து வெற்றி அடைந்திருக்கிறாள் சித்ரா.

டாக்டராக வேண்டுமென்பது சித்ராவின் ஆசை.காசில்லை,கனவுகள் மட்டும் நிறைய இருக்கும் சித்ராவுக்கு உதவ மனசிருப்பவர்கள்

sevalayamurali@gmail

என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

சேவாலயாவில் இப்படி 1000பேரைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் முரளி.

ஒரு குழந்தைக்கு ஒரு வருடத்திற்கு 1000ரூபாய் தேவை.

நாம் 1000பேர் ஆளுக்கு 1000ரூபாய் தந்து விட்டால் இந்தக் குழந்தைகள்

ஆனந்தமாய் படிக்குமே!!

வாருங்கள் ,இந்தக் கல்வி வேள்விக்கு நெய் ஊற்றுவோம்!!

Thursday, April 9, 2009

தமிழ் சினிமா மெல்ல இனி உருப்படும்


நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.தற்கால சினிமாவைப் பற்றியும்,

மிக அதிகமாக செலவு செய்தும் பல படங்கள் ஓடுவதில்லை என்றும் ல் வருத்தப்பட்டார்.

ஓரு சி்னிமா ஓடுவதற்கு கதையும்,அது சொல்லப்பட்டிருக்கும் விதமும் தான் காரணம் என்பது என் கருத்து ! வெண்ணிலா கபடி குழு படம் பார்த்தேன் . கிராமத்தில் நடக்கும் சாதாரணக் கதை ! நண்பர்கள் கபடி விளையாடுவதில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.வெண்ணிலா கபடி குழு என்று குழுவிற்கு் பெயர் வைத்துக் கொண்டு விளையாடுகிறார்கள்.போகுமிடமெல்லாம் தோற்றுப் போகிறார்கள்.

இதில் ஒருவன் மாரி.பள்ளியில் படிக்கும் வயதில் தந்தை இறந்து போக ஆடு மேய்க்க விற்கப் படுகிறான்.கபடியில் மோகம் கொண்ட மாரிக்கு காதலும் வருகிறது.திருவிழாவில் பார்க்கும்வெளியூர் பெண் ஒருத்தி மேல் காதல் வருகிறது மாரிக்கு.அடுத்த திருவிழாவில் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டுப் போகிறாள் அந்தப் பெண்.
கபடி விளையாட்டுப் பயிற்சியாளர் ஒருவர் வெண்ணிலா கபடி குழுவினர்க்கு முறையான பயிற்சி தந்து பெரிய போட்டி ஒன்றில் விளையாட வைக்கிறார்.
பிரமாதமாக வி்ளையாடும் வெண்ணிலா கபடி குழு ஜெயித்து விடுகிறது.
ஆனால் மாரி செத்துப் போகிறான்.
பெரிய நடிகர்கள் என்று யாருமே இல்லாத படம்! ஆனால் விறு விறு என்று திரைக்கதை!மதுரைக்குளேயே இருப்பதைப் போல் உணர வைக்கும் மதுரைத் தமிழ்.
இப்படி கதையைத் தெளிவாக சொல்லத் தெரியும் இயக்குனர்கள் நிறையப் புறப்பட்டால் போதும் ,தமிழ் சினிமா மெல்ல இனி உருப்படும்!
Wednesday, March 18, 2009

லேனா வெளியிட்ட புத்தகம்
பிரபல எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் சமீபத்தில் வெளியிட்ட புத்தகம்


லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் எழுதிய யோசிக்கலாம் வாங்க என்னும் புத்தகம்.


திரு.இல.கணேசன் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றிய இந்த நிகழ்ச்சியில் மதி ஒளி சரஸ்வதியும் கலந்து கொண்டார்.
Wednesday, March 4, 2009

ஆஸ்கார் வெற்றி தரும் செய்தி!நாம் ஒவ்வொருவரும் இந்தக் கணம் நினைத்துப் பூரிப்பு அடையும் செய்தி ரஹ்மானின் ஆஸ்கார் வெற்றி !ரஹ்மானைப் பற்றி வரும் தகவலில் எல்லாம் கூடவே வருகிறது அவரது தாயாரைப் பற்றிய செய்திகளும் !இந்த உயரத்திற்கு மகனைக் கொண்டு வர எத்தனை கஷ்டப்பட்டிருக்கிறார் அந்தத் தாய் !


தாயின் கனவை நனவாக்க எத்தனை உழைத்திருப்பான் இந்த மகன்!


ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் அந்தத் தாயும்,என் தாயின் முகத்தில் சிரிப்பைப் பார்க்க வேண்டும் என்று ஓடிய மகனும்தான்,இந்த ஆஸ்கார் வெற்றி நமக்குத் தரும் செய்தி!

Sunday, March 1, 2009

கணக்கு சரி விடை தப்பு !


வெகு ஆவலாக நான் கடவுள் திரைப்படம் பார்தேன். கணக்கெல்லாம் சரியாகப் போட்டு விட்டு கடைசி வரியில் விடையைத் தப்பாகப் போட்டவிட்ட மாணவனின் விடைத்தாளைப் பார்த்தாற் போல இருந்தது.

பிச்சைக்காரர்களின் பரிதாப உலகத்தை இதை விட அற்புதமாக யாராலும் சொல்ல முடியாது. ஆனால் இந்த பரிதாபத்திற்கு சாவுதான் முடிவு என்பது தப்பித்துக்கொள்ளலாக இருக்கிறதே !

இது என் கோணம் என்று பாலா சொல்லலாம் ! அப்படி அவர் சொன்னால் அவரை இயக்குனர் என்று நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏனென்றால் சாதாரண மனிதனுக்கே தான் வாழும் சமூகத்தைப் பற்றிய பொறுப்பு இருக்க வேண்டும் . திரைப்பட இயக்குனருக்கு இன்னும் கூடுதல் பொறுப்பு வேண்டாமா ?

சொல்லப் போனால் இந்தக் கதைக்கு தப்பான நீதி சொல்லும் ஆர்யா பாத்திரமே வேண்டாம் .

பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை , கொடுமையை ,நிஜம் போலக் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் பாலாவை ”ஹோ” என்று பாராட்ட வேண்டும். படம் முடிந்து எழுந்து போகும் போது “இந்தக் கொடுமை ஒழிய என்னால் ஏதாவது செய்ய முடியுமா என்று நினைக்கக் கூடியவன் கூட அவர்களுக்கு சாவு தான் வரம் என்று நினைக்குமாறு முடித்துவிட்ட பாலா மேல் கோபம் தான் வருகிறது .